பயண நினைவுகள்
முதுமலை நினைவுகள்
குடும்பத்தினரோடு ஒரு பயணம் என்பதை நடப்பிலாக்குவது சற்று கடினம்தான் ! பல நாட்களாகத் திட்டமிட்டு வந்த பயணம். பல முறைகள் என் உடல் நிலையைக் காரணம்காட்டி நான் மறுத்துக் கொண்டிருந்தேன். இறுதியில் மக்கள் எப்படியோ என்னை சம்மதிக்க வைத்துக் கூட்டிச் சென்றனர். திரும்பி வந்ததும்தான் உணர்ந்தேன் ; பயணம் என்பது - அதுவும் இதுபோன்ற இயற்கைச் சூழல்களின் இனிமை நிறைந்த இடங்களுக்குச் செல்வது என்பது எத்தனை புத்துணர்ச்சி அளிக்க வல்லது என்பதை ! அப்படிச் சென்ற ஒரு இடம்தான் முதுமலைக் காடுகள் !
சனிக்கிழமை ஜூன் 05 2019 அன்று காலை 8 மணிக்குப் புறப்படும் ரயிலில் மைசூர் சென்றடைந்தோம். முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் வண்டி ஒன்று ரயில் நிலையத்தின் வெளியே எங்களை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்தது. அங்கிருந்து மசினகுடி பயண விடுதி ஒரு 3 மணி நேரப் பயணம்.. வழியில் பந்திப்பூர் காட்டுப்பகுதியைத் தாண்டும் போது முதன் முதலில் என் கண்ணில் பட்டது புள்ளிமான்களின் கூட்டம் . ஒவ்வொன்றும் என்ன ஒரு அழகு ! இப்போதுதான் புரிந்தது ராமாயணத்து சீதை ராமனிடம் மானைப் பிடித்துத் தரச் சொன்னதன் காரணம் ! கண்ணைக்கவரும் படைப்பு ! துள்ளி ஓடும் நடையழகும், துவண்டு விழும் உடலழகும், மருண்ட பார்வையும், மயக்கும் பொன் நிறமும் யாரைத்தான் கவராது ? சற்று தூரத்தில் இரண்டு பெரிய யானைகள் காட்டு மரங்களைத் துதிக்கையில் கட்டித் தூக்கிச் சென்று கொண்டிருந்தன. எங்கள் வண்டிக்குக் கொஞ்சம் முன்னில் பாதையைக் கடந்து சென்றன. அசைந்து அசைந்து அவை நடக்கும் அழகே தனி ! 'சின்ன யானை நடையைத் தந்தது' என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. உடனேயே மனம் நாற்பது வருடம் பின்னோக்கிச் சென்று விட்டது ! பள்ளிச் சிறுவனாயிருக்கையில் அம்பத்தூர் சினிமாக் கொட்டகையில் பார்த்தது 'நீதிக்குப் பின் பாசம்' படம் ! அதில் வரும் 'மானல்லவோ கண்கள் தந்தது" என்ற பாடலில்தான் மேற்சொன்ன வரிகள் வரும். மனதில் அந்தப் பாடல் ரீங்கரித்துக் கொண்டிருக்க, பயணமும் தொடர்ந்தது .
கர்நாடக எல்லை முடிந்து, தமிழ் நாட்டு எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் தொடங்கியது. அங்கு ஒரு சின்ன அழகான ஓடை . அதற்கு மேல் குட்டியான ஒரு பாலம். அதன்மேல் ஒரு வரவேற்பு வளைவு. அதன் இரு பக்கங்களிலும் கொத்து கொத்தாய் குரங்குகள் ! அவை அடுத்துள்ள மரங்களின்மேல் ஒவ்வொன்றாகத் தாவும் கண்கொள்ளாக் காட்சி . தொடர்ந்து வந்த மரங்களும் செடிகொடிகளும் பறவைகளின் ஒலியும் மனதிற்கு ரம்மியம். ஒரு வழியாக 3 மணி வாக்கில் மசினகுடி பயண விடுதியைச் சென்று அடைந்தோம். விடுதி நடத்துனரும் அவர் மகனும் எங்களை அன்புடன் வரவேற்றனர். இரண்டு பெரிய அறைகள் உள்ள ஒரு 'காட்டேஜ்' எங்களுக்குத் தரப்பட்டது. முன்னாலும் பின்னாலும் கண்ணெட்டும் தூரம் வரை புல்தரைகள், அடர்ந்த மரங்கள் ஒரு பகுதியில், தூரத்தில் நெடிதுயர்ந்த மலைகள், என்று வெகு ரம்மியமான காட்சிகள் கண்ணையும் மனதையும் நிறைந்தன. தேநீருக்கும் பிறகு சற்று நேரம் இளைப்பாறினோம். முதுமலைப் பகுதிக் காடுகளுக்குள் செல்ல அரசுத் தரப்பிலிருந்து வண்டிகள் வாடகைக்குப் தரப்படுகின்றன. அதில்தான் பயணம் செய்யவேண்டும். மாலை ஐந்து மணியளவில் அங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள விபூதி மலைக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். ஒரு காலத்தில் அந்த மலைப்பாதையில் வெண்மையாக இருந்தனவாம். அதன் பொடிகள் சற்று விபூதியின் மணத்தையும் கொண்டிருந்தது. அதனால்தான் விபூதிமலை என்று பெயர் பெற்றது. இவை நாம் கேள்வியுற்ற செய்திகள். காட்டு வழியில் உள்ள கரடுமுரடான மண்பாதையில்தான் பயணம் செய்தோம். வழியெங்கும் வகைவகையான மரங்கள், செடிகள், மூங்கில் புதர்கள், காண்பதற்கு சுகம். அதைவிட சுகமாக இருந்தது அருமையாக வீசிய குளிர் காற்று ! மலைமேல் வண்டி ஏறும்போது சற்று பயமாகத்தான் இருந்தது. மலை உச்சியை அடைந்தோம். அந்த மலை இருந்த இடத்தின் பெயர் பொக்காரம். அங்கு ஒரு சிறிய அழகான முருகன் கோவில் உள்ளது. கோவிலைக் கவனித்து பூஜையும் செய்கிற பூசாரி எங்களை வரவேற்றார். வழிபாடு முடிந்தபின் அவர் அந்தக் கோவில் பற்றிய விவரங்கள் சொன்னார். "இந்தக் கோயில் இந்த அளவு பெரியதாக ஆனதற்கு முக்கிய காரணம் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அவர்கள்தான். ஊர் மக்கள் இந்த இடத்தில் முருகன் கோயில் வேண்டும் என்று மிகவும் விரும்பினர் . ஆனால் வனத்துறை அதிகாரிகள் இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமான தான் இங்கு கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டனர் . இந்த நிலைமையில் தான் மிதுன் சக்கரவர்த்தி அவர்கள் தலையிட்டு மிகவும் கஷ்டப்பட்டு இதற்கான அனுமதியை வாங்கி கோயிலைக் கட்டி கும்பாபிஷேகமும் செய்து முடித்தார். ஒவ்வொரு பண்டிகை விசேஷங்களுக்கும் இன்னும் வந்து கொண்டு பூஜைகளை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்" - இதுதான் அந்தப் பூசாரி அவர்கள் சொன்னது.
கோவிலை விட்டுப் படியிறங்கினதும் பொன்னந்தி மாலைப் பொழுதின் புன்னகைத் தோற்றம் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே ஈர்த்தது. காமிராக்களின் கண்களையும் சேர்த்துதான் ! வண்டியில் ஏறி அமர்ந்தோம். தூரத்துப் புல்வெளியில் மனத்தைக் கவரும் மான் கூட்டம் வழக்கம் போல் ! காட்டின் அருகே இறங்க இறங்கக் கூடடையும் பறவைகளின் இன்னிசைக் கச்சேரி ! அந்த நேரம் வானம் கருணை கொண்டு ஆனந்தக் கண்ணீரைச் சற்று நேரம் பொழிந்தது. குளிர்க் காற்றில் மனமும் உடலும் ஒருங்கே அமைதி அடைந்தன. சந்தன மரம் ஒன்றிரண்டைக் காட்டினார் காரோட்டி. நின்று தடவிப் பார்க்கும் ஆசை வந்தது ! சற்று தூரத்தில் குட்டி மயில்களின் அட்டகாசம் ! குட்டிமயில் கூட்டம் ஒன்று கொட்டமடித்தாடக் கண்டோம் ! அருமையான காட்சி. அப்படியே வண்டியை நிறுத்தி சத்தமின்றிக் கண்டு களித்தோம் ! இன்றைய பொழுதுக்கு இது போதும் என்ற எண்ணத்துடன் இருட்டுவதற்கு முன்னால் விடுதியை அடைந்தோம் ! மான்கூட்டம் போல் மனசெங்கும் மகிழ்ச்சி நிறைந்தது !
06.06.2019
அடுத்த நாள் காலை 7 மணிக்குள் அனைவரும் ரெடியாகி விட்டோம். அந்த விடுதியிலேயே வழங்கப்பட்ட அருமையான சிற்றுண்டியை முடித்துக்கொண்டு முதுமலை புலிகள் காப்பகத்துக்குச் சென்றோம். வனத்துறையினர் ஏற்பாடு செய்து தந்த ஜீப்பிற்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி வண்டிக்காகக் காத்திருந்த நேரத்தில் எங்கள் கண்ணில் பட்டன இரண்டு அழகான யானைகள். காட்டின் தொடக்கத்தில், அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில், அவை ஆடிக்கொண்டே நின்று கொண்டிருந்த அழகே தனி ! சற்று நேரத்தில் வண்டி வர, நாங்கள் ஆறு பேரும் என் குட்டிப் பேரன்கள் இருவருடனும் ஏறி அமர்ந்து கொண்டோம். வண்டி மலைச் சரிவில் செல்லத் தொடங்கியது. சற்று தூரத்தில் முதலில் கண்ணில் தென்பட்டவை மான்கள் தான் ! அழகான புள்ளி மான்களும் சில கிளை மான்களும் !
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள்"
மான்களைக் கடந்து ஒரு வளைவு திரும்பி காட்டின் தொடக்கப் பகுதியில் புலிகள் தூரத்தில் கண்ணில் படுகிறதா என்று பார்ப்பதற்காக ஐந்து நிமிடங்கள் வண்டியை நிறுத்தினோம். எங்கள் அதிர்ஷ்டம், ஒன்றும் கண்ணில் படவில்லை ! புறப்பட்டோம். சற்று தூரத்தில் அடர்ந்த ஒரு மூங்கில் காடு ! எப்பொழுதுமே மூங்கில் காடுகளில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு! எத்தனை உயரம் ! என்ன ஒரு கம்பீரம் ! இருட்டுக்கும் மை பூசும் அடர்த்தியான உருவம் ! முதுமலைக் காட்டுக்குள் நான் கண்ட முந்நூறு விதமான மரங்களில், மனதில் முதன்மை இடத்தைப் பிடித்தது மூங்கில் ! புதர்கள் கண்ட இடமெல்லாம் என்னுள்ளில் புல்லாங்குழல் இசைத்தது ! கண்ட இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்தச் சொல்லி அந்த மென்மை மூங்கிலின் மணத்தையும் தன்மையையும் மனதால் உணர்ந்தேன் ! மனதை எங்கோ இழுத்துக் கொண்டே சென்றன மூங்கில் காட்சிகள் ! ம்ம்ம்....இப்போது ஒரு சிறிய கதை கேளுங்கள் !
கண்ட காட்சிகளால் நான் ஆறு வயதுச் சிறுவனாக மாறி விட்டேன் ! மாயவரத்தின் அருகில் ஒரு கிராமம் ! அங்குதான் இருந்தார் என் அத்தை . மாமா ஒரு பெரிய மிராசுதார் . ஒவ்வொரு விடுமுறைக்கும் நாங்கள் அங்கு செல்வதுண்டு. அரண்மனை மாதிரி பழமையைப் பறைசாற்றும் வீடு. எதிர்த்தாற் போல் தாத்தா வீடு ! கொல்லைப் புறத்தில் ஒரு ஓடை உண்டு. அந்த நந்தவனத்தை ஒரு சிறிய காடு என்றே சொல்லலாம். அங்கு மயில், மைனா, புறா, கிளி போன்ற பட்சிகளுடன் மான்களும் ஓடித் திரியும். உண்மைதான். இவற்றையெல்லாம் வளர்த்து வந்தார்கள் அங்கே. அங்கு நாங்கள் தங்கும் காலங்கள் சுவர்க்க வாசம் என்றே தோன்றும். ஒருநாள் தனது தோப்புக்கு , ஒரு ஆளை விட்டு எங்களைக் கூட்டிக் கொண்டு போகச் செல்வார் மாமா! அடுத்த நாள் காலை 8 மணிக்குள் நாங்கள் ரெடியாக வேண்டும் என்பது திட்டம். அந்த அனுபவங்களின் எதிர் பார்ப்பில் இரவு உறக்கம் வரவேயில்லை ! காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து ரெடியானோம். நீரூற்றி வைத்திருந்த நேற்றைய சாதத்தில் தயிர் விட்டுப் பிசைந்து வைத்திருந்தார் அத்தை. தாளித்த கடுகின் மணம் கமகம வென்று மூக்கைத் துளைத்தது. தொட்டுக்கொள்ள உப்பில் ஊறிய மாவடு ஒரு தட்டில் ! அனைவரும் வட்டமாக உட்கார, சாதத்தை உருட்டி உருட்டிக் கையில் போட்டார் அத்தை. கையில் இட்டிருந்த மருதாணிச் சிவப்பின் மணத்துடன் தயிர்சாதம் சுவைத்தது. சாப்பிட்டு முடித்தோம் நாங்கள் ! வெளியே இரட்டை மாட்டு வண்டி தயாராக இருந்தது . மாமாவின் தோப்பு இருப்பது கொஞ்சம் தள்ளி, வீரசோழன் காவிரி ஆற்றுக்கு அந்தப்புறத்தில் ! நாங்கள் எல்லோரும் மதியம் சாப்பிடுவதற்காக இட்லி சட்டினி மிளகாய்ப்பொடி, வாழைப் பட்டைத் தட்டுகள் எல்லாம் தயாராக வைத்திருந்தார் அத்தை. வேலுச்சாமி அண்ணன் அனைத்தையும் எடுத்துக் கொண்டார். வண்டியில் பரப்பியிருந்த வைக்கோலின் மேல் ஒரு ஜமுக்காளத்தை விரித்தார். நாங்கள் நான்கு குழந்தைகளும் வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். புறப்பட்டது மயிலக்காளைகள் பூட்டிய வண்டி ! வழியெங்கும் சிரிப்பும் கும்மாளமுமாகப் போனது ! சாலையின் இருமருங்கிலும் ஆற்றுப்படுகை கால்வாய்கள் ! கால்வாய் நீரில் மீன்கள் துள்ளித் துள்ளி வீழ்ந்து கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று மனதைக் கவ்வியது. ஆற்றுப் பாலம் தாண்டி சற்று தூரம் வந்து தோப்பை அடைந்தோம் . வேலுச்சாமி அண்ணன் எச்சரித்தார் " குழந்தைங்களா, மறக்காம செருப்பும் போட்டுக்கிடுங்க; மூங்கில் முள்ளுங்க குத்திடப் போகுது !" முதலில் தென்னந்தோப்பு ! சிலர் மரங்களிலிருந்து தேங்காய்களை இறக்கிக் கொண்டிருந்தனர். முதுகில் கூடை இணைத்த கயிற்றைக் கட்டிக்கொண்டு வெகு லாகவமாக அவர்கள் மரமேறி இறங்கும் அழகை நாங்கள் அதிசயித்துடன் பார்த்தோம் ! அவர்களுக்கு ஏதோ உத்தரவுகளைப் பிறப்பித்தார் வேலுச்சாமி அண்ணன் . பிறகு எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.
நடுவில் இருக்கும் ஒரு சிறிய ஓடையைத் தாண்டுவது ஒரு பெரிய வீரச் செயல் எங்களுக்கு. மாந்தோப்பை நெருங்கி விட்டோம். மாம்பழத்தின் மணம் மூக்கைத் துளைக்க ஆரம்பித்தது ! அந்த வகை மாம்பழங்களுக்கு ஒரு தனி மணம். இன்னும் அந்த மணம் என் மூக்கிலேயே இருக்கிறது. மாந்தோப்புக் குயில்களின் கூவல் இன்னிசையாக ஒலித்தது. கால்வாயைத் தாண்டி கொக்கும் நாரையும் வேகமாய் பறந்து கொண்டிருந்தன. மற்ற பட்சிகளின் போக்குவரத்தும் கூச்சலும் மனதை நிறைத்தன. சற்று நேரம் ஓடிவிளையாடிய பின்னர் சுற்றி அமர்ந்து இட்டிலி சாப்பிட்டு, பிறகு நடந்தோம் வயற்புறம் நோக்கி ! அங்கு நெற்கதிர் அறுத்துக் கொண்டிருக்கும் காட்சி மனதில் ஓடியது. செல்லும் வழியில், என் மனம் கவர்ந்த மூங்கில் காடுகளின் அருகில் நடந்து கொண்டிருந்தோம் நாங்கள் ! திடீரென அண்ணன் எங்களை சத்தம் போடாமல் நின்று கொள்ளச் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று தூரத்தில் மகுடி ஊதும் ஓசை கேட்பதை கவனிக்கச் சொன்னார். நாங்கள் அந்த அருமையான இசையைக் கேட்டுக்கொண்டே நின்றோம். கொஞ்சநேரம் கழித்து நடக்கத் தொடங்கினோம்! (வீட்டுக்குச் சென்றபின் அத்தை சொன்னதும் தான் புரிந்தது பாம்புகளைப் பிடிக்கத் தான் அந்த மகுடி ஊதல் என்று !) அந்த மூங்கில் புதர்கள் ! மூங்கில் இலைகளின் மணம் ! மூங்கில் காட்டில் அன்று நான் கேட்ட அந்த இசை ! அதுதான் இன்று வரை என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது !
அன்று கொண்ட அதே அனுபவத்தை 50 வருடங்கள் கழித்து இன்று அனுபவித்தேன் இந்த முதுமலைக் காட்டில் ! ஒவ்வொரு மூங்கில் புதரும் ஒவ்வொரு விதமான அருகாமையை என் மனதில் உணர்த்தியது ! மூங்கில் அருகே சென்று விட்டால், என் மனதை ஆக்கிரமிக்கும் இசை உணர்வுகள் வினோதமானவை ! மூங்கில் தந்த கொடைதானே முகுந்த கானம் ! இலைகள் உரசிக் கொள்வதே இசை தரமாக இருந்தது. மனம் அந்தக் கொஞ்ச நேரம் நீந்திக் குளித்தது, இசை அலையில் !
முட்கள் நிறைந்தாலும் சில பசுமை மாறாத பச்சை மூங்கில் இலைகள் ! முதுமை படர்ந்த பழுப்பேறிய பெரிய வலிமை நிறைந்த நிறைந்த சில மரங்கள் ! உதிர்ந்த இலைகளிலும் உள்ளார்ந்த பொருள் வளங்கள் ! மனதில் மாறாத இசை நயத்தைப் பண்பாக்கித் தந்த சில இலை நயங்கள் !
அடர்ந்த மூங்கில் காடென்றால் அதன் அழகே என்றும் தனிமைதான் !
மூங்கில் இசையில் முழுமை உணரும் மனதில் என்றும் இனிமை தான் !
மூங்கில் மணத்தை நுகர்ந்து கொண்டே முன்னேறிச் சென்றோம் நாங்கள் ! ஓரிடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேக்கு மரங்களும் பூவரச மரங்களும் நிறைந்திருந்தன. அவ்வப்போது மான்கள் தரிசனம் தந்தன. மரங்களில் அமர்ந்தவாறு சில பறவை இனங்கள். கண்ணுக்கு ரம்மியமான காட்சிகள். பறவையினங்களின் சப்த ஜாலங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தந்தது ! புலிகள் காட்டின் மையப் பகுதிக்குச் சென்று விட்டன போலும் !
வரும் வழியில் தொலைவில் காணும் பிகினி நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்றோம். அங்கே சற்று நேரம் இளைப்பாறல் ! தொலைவில் காணும் நீர் வீழ்ச்சி மிகுந்த அழகு! புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். கையில் கொண்டு சென்ற கடலை, முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகளைக் காலி செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்! திரும்பும் வழியிலும் புலிகள் காணப்படவில்லை ! வழியில் ஒன்றிரண்டு மயில்கள் தோகை விரித்தாடும் அழகைக் கண்டோம் ! பிறகு புறப்பட்ட இடத்துக்கே கொண்டுவந்து விடப்பட்டோம். அதன் பிறகு எங்களது வண்டியில் ஏறினோம். மதிய உணவு நேரம் வந்து விட்டதால் சாப்பாட்டுக்கு விடுதிக்கே திரும்பினோம். சாப்பாட்டை முடித்துக்கொண்டு சற்று நேரம் இளைப்பாறினோம்.
'நின்றால் நாட்டிய நடையழகு'
மாலை 4 மணி ஆயிற்று. தேநீரும் சிற்றுண்டியும் ஆனவுடனேயே கிளம்பினோம். புலிகள் காப்பகம் தாண்டி ஒரு சிறிய பாதை மாற்றம் கழிந்தால், ஒரு யானைக் கொட்டடி இருக்கிறதாம். அதைக் கண்டு வரலாம் என்று புறப்பட்டோம். பதினைந்து நிமிடம் பயணத்தில் அவ்விடத்தை அடைந்தோம். வண்டியை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சற்று தூரம் நடக்கவேண்டும். திடீரெனத் தொடங்கிய மழை மனதையும் உடலையும் ஒருசேரக் குளிர்வித்தது ! தூறலில் நனைந்து கொண்டே நடந்தோம். யானைக் கொட்டடியைச் சென்றடைந்தோம். இங்குமங்குமாக சங்கிலியால் கட்டியிடப் பட்டிருந்தன யானைகள் !
சட்டென மனம் சிவந்து போனது. ஏதோவொரு இனம் புரியாத வருத்தம் உள்ளெங்கும் நிறைந்து போனது. மிகப்பெரிய உருவமும் அளவிடற்கரிய வலிமையும் உள்ள அந்த மிருகங்கள் ஏதோவொரு உள்ளார்ந்த கட்டுப்பாட்டின் காரணமாக மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் காட்சி மனதை அலை பாய வைத்தது .
அந்தப் பெரிய நிலப்பரப்பில் மொத்தம் 13 யானைகள் கட்டியிடப் பட்டிருந்தன. நாங்கள் சென்ற நேரம் அவற்றுக்கு உணவளிக்கும் நேரம். காட்டில் உலாவும் அந்த யானைகளை வனவிலங்கு இலாகாவின் பாதுகாப்பில், பலவிதமான பயிற்சிகளையும் அளித்து உபயோகப்படுத்துவதற்காக ஓரிடத்தில் இருத்தியுள்ளனர். நினைத்துப் பார்த்தால் முதலில் பரிதாபம் தான் தோன்றியது. சுதந்திரமாக இருக்க வேண்டிய ஜீவன்கள் எதற்காக எதற்காக இப்படிக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்று தோன்றியது. ஒருபுறம் இப்படித் தோன்றினாலும் மறுபுறம் இறைவனுக்கும், அரசின் இந்த ஏற்பாட்டிற்கும் நன்றி செலுத்தத் தோன்றியது. சிந்தித்துப் பார்த்தால் இந்த மறுபக்கம் புரியும் ! காடுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் யானைக்கூட்டத்தில் இந்த ஒரு சிலவற்றுக்கேனும் நேரத்துக்கு உணவும் பராமரிப்பும் கிடைக்கிறதே என்று மகிழ வேண்டும்.
மாலை ஆறு மணிக்கு உணவளிக்கும் நேரம். அத்தனை யானைகளும் ஒன்றாக ஓரிடத்தில் நிறுத்தப்படுகின்றன. பழக்கப் படுத்தப்படுவதின் காரணமாக எத்தனை அழகாகக் கீழ்ப்படுகின்றன கட்டளைகளுக்கு ! அவை நினைத்தால் அத்தனையும் ஒரு கணத்தில் தவிடுபொடியாகிவிடுமே ! பஞ்செனப் பறந்தோடுவரே மக்கள் ! இருப்பினும் அவை ஏதோவொரு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நிற்கின்றன. மணியடித்தவுடனே சோறு வருகிறது. பெரிய பெரிய கவளமாக மூன்று கவளங்கள் ராகியும் அரிசியும் கலந்த சோறு ஊட்டப்படுகிறது. மூன்று கவளம் சோறு, இரண்டு கரும்பு மற்றும் ஒரு தேங்காய் இவையனைத்தும் தரப்படுகின்றன. இதற்காக அவை வந்து வரிசையில் காத்துக் கிடப்பது விநோதம் தான் !
யானைகள் உணவு உண்ணுகையில் கீழே சிந்திய உணவுப் பண்டங்களை அங்கிருந்த சில பன்றிகள் வந்து உண்டு சென்றன. வினோதமாகவும், அதே நேரம் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சமூகத்தின் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளில் இதுவும் ஒன்றென எண்ணிக் கொண்டேன். தூரத்தில் சில குட்டி மயில்கள், விரிக்க இயலாத தம் வண்ணச் சிறகுகளைப் பரத்திக் கொண்டு திரிந்த அழகு பார்வைக்கு விருந்தாக இருந்தது.
அவ்விடத்தில் ஒரு பெரிய பலகையில் அங்குள்ள யானைகளின் பெயர்கள், அவற்றின் வயது, அவை அங்கு கொண்டு வரப்பட்ட தேதி, அவற்றுக்கு அளிக்கப்படும் உணவின் பெயர்கள் மற்றும் அதன் அளவு, அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. தேவைப்படும் போது அவற்றுக்குத் தேவையான மருத்துவ வசதியும் கிடைக்கிறது. அதற்கான மருந்துகளை ஒரு தனி அறையில் வைத்து உபயோகிக்கிறார்கள். அதிக பட்சமாக 69 வயது நிறைந்த ஒரு யானையும் அங்கு காணப்பட்டது !
ஆனை என்றாலே அழகு என்றுதான் பொருள் கொள்ளல் வேண்டும். அது தலையை ஆட்டிக் கொண்டும் தும்பிக்கையை அசைத்துக் கொண்டும் நிற்பதே ஒரு தனி அழகு ! கண்கள் சிறியன என்றாலும் அவை பார்க்கும் விதமே சிறப்பு! பார்வையாலேயே அவை எனக்குச் சொன்ன கதைகள்தான் இத்தனையும் ! அந்த அழகை ஒரு மணிநேரம் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன் மகிழ்ச்சிக்கிடையிலும் சங்கடத்தின் ஓரிழை மனதில் உறுத்தவே செய்தது !
மழை விட்டிருந்தாலும் தூவானம் விடவில்லை. இருட்டுவதற்கு முன்பு இருப்பிடம் சேரவேண்டுமே என்ற எண்ணத்தில் விரைந்து புறப்பட்டோம் . வழியில் கலைமான்கள் சில கூட்டமாகச் சென்று கொண்டிருந்தன. இன்னும் சற்று தூரம் சென்றதும் யானைகளின் கூட்டம் ஒன்று எங்கள் பாதையைக் கடந்து பள்ளத்தில் இறங்கிக் காட்டின் மறுபுறத்துக்குச் செல்வதையும் கண்ணுற்றோம். காட்சிகள் அழகு ! அனைத்தையும் கண்டு களித்து ஒரு வழியாக விடுதிக்கு வந்து சேர்ந்து இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கும் போது மணி பத்து !
அடுத்த நாள் விடியலிலேயே எழுந்து , மைசூருக்குப் புறப்பட்டோம். அங்கிருந்து மாலை ரயிலைப் பிடித்து பெங்களூரில் வீடு வந்து சேர்ந்தோம்.
இடம் விட்டு நகர்ந்த பின்னும்
இதயம் விட்டு நகரவில்லை
இன்னும் முதுமலைக் குளிர்காற்றும்
ஈரம் உலராப் பசுமை களும் !
மறக்க முடியாத ஒரு பயணமாக அமைந்தது இது !
----கி.பாலாஜி
Comments
Post a Comment